சனி, 27 நவம்பர், 2010

மறந்து போன விளையாட்டுகள்

முட்டாள் பெட்டி என்று சொல்லப்படும் தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், கணிப்பொறி, இணையம் மற்றும் பல புதிய வரவுகளால் நாம் இழந்துவிட்ட மறந்துவிட்ட விளையாட்டுகள் பல.

அதில் எனக்கு பிடித்த பல விளையாட்டுகளில் ஒன்றுதான் கல்லாங்காய்.  வீடு கட்ட உதவும் ஜல்லி என்று சொல்லப்படும் கற்களை நூற்று கணக்கில் வைத்து விளையாடும் வகை மிகவும் பிரசித்தம். இது தவிர ஐந்து அல்லது ஏழு கற்களை மட்டும் வைத்து விளையாடுவார்கள். ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு அதற்குள் கீழே இருக்கும் கற்களை எடுத்துக்கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் லாவகமாக பிடிக்க வேண்டும். ஆஹா என்ன ஒரு அருமையான விளையாட்டு.

என் சிறு வயதில் பள்ளி விடுமுறைகளில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடியது நன்றாக நினைவிருக்கிறது. நேரம் போவதே தெரியாமல் நாள் பூராவும் விளையாடுவோம். சென்னையில் கல்லாங்கா என்று சொல்லப்படும் இந்த விளையாட்டு கல்லாங்கல், கல்லாங்காய், பொதக்காய், கொத்துக்காய், கல் விளையாட்டு என்று பல பெயர்களில் பல ஊர்களில் அழைக்கப்படுகிறது.

தாயக்கட்டை, தாயபாஸ் (சென்னையில்) ஆஹா! என்னஒரு அருமையான விளையாட்டு. இந்த விளையாட்டைப் பற்றி மட்டும் ஒரு தனி பதிவே எழுதாலாம். தொடர் கட்டங்களாக வரைந்து தாயக்கட்ட்டையில் விழும் எண்ணுக்கேற்ப காய்களை நகர்த்தி விளையாடுவார்கள். முதலில் யார் தன் எல்லாக்கய்களையும் பழம் என்று சொல்லப்படும் கடைசிக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி. பொதுவாக கூட்டல் குறி போல் வரைந்து விளையாடுவது பிரபலம். இதில் நாண்கு அணிகள் வரை விளையாட முடியும். சென்னையில் ஏரோபிளேன் என்றொரு ஆட்டம் ஆடுவார்க்கள். ஆம். பார்பதற்கு விஞ்ஞான படங்களில் வரும் விமானம் போலவே வரைந்திருப்பார்கள். இதில் கூட்டல் கட்டம் ஆட்டத்தைப் போல் காய்களை மற்ற அணிகளின் காய்களை பின்தொடர்ந்து நகர்த்தாமல்  எதிர் திசையில் நகர்த்தி விளையாடுவார்கள். கும்பகோணம் பகுதியில் (எனக்கு தெரிந்த வரையில்!)  சோணாலு என்றொரு வகையில் விளையாடுவார்கள். தாயகட்டத்தில் கட்டை உருட்டும் போது இரண்டு கட்டைகளிலும் இரண்டு இருந்தால் அது சோனாலு எனப்படும். அதன் மதிப்பு நான்கு அல்ல, எட்டு. மேலும் சாதாரணமாக நான்கு விழுந்தால் மறு உருட்டல் கிடையாது. ஆனால் சோனாலுக்கு தாயம் ஐந்து ஆறு மற்றும் பண்ணிரெண்டைப் போல இன்னொரு உருட்டலும் உண்டு. சதுரங்கம் போலவே இருந்தாலும்  9*9, 11*11, 13*13  போன்ற எண்ணிக்கைகளில் கட்டங்கள் அமைந்திருக்கும். இதில் காய் நகர்த்துவது கொஞ்சம் குழப்பமாக இருக்கும். வெளியிலிருந்து ஆரம்பித்து சுற்றி சுற்றி நடுவில் சென்று முடிக்க வேண்டும். இந்த முறையில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஜோடி ஜோடியாகவும் காய்களை நகர்த்த முடியும். உதாரணமாக ஆறு விழுந்தால் ஜொடிக் காய்களை மூன்று கட்டங்கள் நகர்த்தலாம். அப்படி ஜோடியாக நகர்த்தப்படும் காய்களை ஜோடி காய்களை வைத்தே வெட்ட முடியும். இதிலும் நாண்கு அணிகள் வரை விளையாடலாம்.

புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒரு விளையாட்டும் எனக்கு பிடிக்கும். புளியங்கொட்டைகளை குவித்து வைத்து அதை ஊதி கலைத்து ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். எடுக்கும்போது மற்ற கொட்டைகள் அசையாமல் அலுங்காமல் எடுக்க வேண்டும். இதைப்போலவே புளியங்கொட்டைகளுக்கு பதிலாக தென்னங்குச்சிகளை வைத்தும் விளையாடலாம். சற்று விதிகள் மாறும். தென்னங்குச்சிகளை ஒரே நீளத்தில் வெட்டி ஒன்றாக வைத்து ஊதி கலைத்துவிட வேண்டும். அவற்றை மற்றொரு குச்சியால் ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு. புளியங்கொட்டைகளை வைத்து ஒத்தயா ரெட்டையா என்ற மற்றொரு விளையாட்டும் விளையாடுவோம். இருக்கும் புளியங்கொட்டைகளை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டும். பிறகு கை நிறைய எடுத்து வைக்க வேண்டும் மற்றவர் அதில் உள்ள எண்ணிக்கை ஒத்தயில் உள்ளதா ரெட்டையில் உள்ளதா என்று சொல்ல வேண்டும். சரியாக இருந்தால் அதை அவர் எடுத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் அதே அளவு மற்றவருக்கு கொடுக்க வேண்டும்.

சிறு வயதில் நான் மிகவும் ரசித்து விளையாடிய மற்ற விளையாட்டுக்கள் கோலியும் பம்பரமும் பட்டமும். இவற்றையும் பல வகைகளில் விளையாடுவோம். ஒரு சமயத்தில் எட்டடி தூரத்தில் உள்ள கோலிகளையும் குறி பார்த்து அடிக்கும் திறமை பெற்றிருந்தேன். அதேபோல் பம்பரத்தையும் அந்தரத்தில் எய்து கையில் லாவகமாக ஏந்துவேன். நூலில் மாஞ்சா போட்டு பட்டம் விடுவது என்றால் சாப்பாடு தூக்கம் எதுவும் வேண்டாம். இப்பவும் எங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு பட்டம் செய்யவும் பரக்க விடவும் கற்றுத் தருகிறேன்.

கண்ணாமூச்சியும் திருடன் போலிஸ் விளையாட்டையும் என்னால் மறக்கவே முடியாது. நாண்கு ஐந்து தெருக்களில் சுற்றி சுற்றி துரத்தி துரத்தி பிடிக்கும் திருடன் போலிஸ் விளையாட்டு எங்களை மிகவும் சுறுசுறுப்பாக வைத்தது. அப்போதெல்லாம் மாலை நேரத்தில் கரண்ட் கட் என்றால் நொண்டி விளையாட்டுத்தான் (பாண்டி, சில்லு என்றும் சொல்லுவார்கள்). அதிலும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லொரும் சேர்ந்து விளையாடுவது ஒரு தனிச்சுவைதான்.

இது தவிர பல்லாங்குழி, கல்லா மண்ணா, ராஜா ராணி, வளையல், கிச்சி கிச்சி தாம்பாலம், பரமபதம், கொருக்கலிக்கா முந்திரிக்கா, ஒரு பானை தண்ணி ஊத்தி என்று பல விளையாட்டுகளை அப்போது விளையாடினேன். ஆனால் இன்று உள்ள சிறுவர்களுக்கு இதில் ஏதாவது ஒன்றையாவ்து விளையாட அல்லது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?

செவ்வாய், 16 நவம்பர், 2010

என்கவுன்டர்

என் நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் சமீபத்தில் நடந்த மோகன்ராஜ் என்கவுன்டர் பற்றிய செய்தி ஒரு சூடான விவாதத்திற்கு எங்களை இட்டுச் சென்றது. இந்த என்கவுன்டர் சரிதான் என்று நானும் இல்லை என்று என் நண்பரும் விவாதித்தோம்.

அவர் பார்வையில் எந்த ஒரு குற்றதிற்கும் மரணம் என்பதை தண்டனையாக தரக்கூடாது என்பதுதான். தூக்கு தண்டனைகூட சட்டமேயானாலும் அது திட்டமிட்டு செய்யப்படும் கொலைதான். மரணம் என்பது இயற்கையை தவிர வேறு எந்த வகையிலும் நடந்தாலும் அது கொலையேயாகும். ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த இழப்பிற்காகவோ அல்லது கொடுமைக்காகவோ தன்னிலை மறந்து கொலை செய்து விட்டால் அதை சட்டம் மன்னிக்காவிட்டால்கூட நாம் சில சமயங்களில் மன்னித்து விடுகிறோம். பல நாடுகளில் இந்த மரண தண்டனையை தடை செய்து விட்டாலும் நாம் என்கவுன்டர் என்ற பெயரில் செய்து வருவது மனித நேயமற்ற செயலாகும்.

இவர் கூறியதில் எந்த ஒரு கருத்தையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. சட்டம் என்பதை மனிதனுடைய நாகரீகத்தின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். குற்றம் செய்பவர்களிடத்திலிருந்து மற்றவர்களை காப்பாற்றவும் மனிதனை நெறிப்படுத்தி அவனை நல்வழி நடத்தவே சட்டம். எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் விளைவையும் இழப்பையும் பொறுத்து தண்டனையின் கடுமை இருக்கிறது. அப்படியானால் மோகன்ராஜின் செயலுக்கு மரணத்தைவிட வேறு எந்த தண்டனையை தருவது? அவர் என்ன போக்குவரத்து விதிகளையா மீறிவிட்டார் ஐம்பது நூறு என்று அபராதம் விதிப்பதற்கு.

இது போன்ற தண்டனைகள் நிச்சயமாக கொடூரமான குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வியாழன், 11 நவம்பர், 2010

தமிழையும் காப்பாற்றுவோம்

 இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானாவில் தமிழ் மொழியை தொழில் ரீதியாக எடுத்துக் கொள்வது பற்றிய ஒரு அருமையான தலைப்பு. அதில் ஒருவர் சொன்ன ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

நாம் ஆங்கிலத்தில் பேசும்போது ஏதாவது இலக்கணப் பிழை செய்தால், நம்மை சுற்றி இருப்பவர்கள் உடனே திருத்துவார்கள். ஆனால் தமிழில் இலக்கணப் பிழையாக பேசினாலோ அதை யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக பல சமயங்களில் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு கிண்டல் செய்கிறோம்.

அதிலும் நம் தொலைகாட்சியில் வர்ணனை செய்யும் பெண்களின் தமிழை கேட்டால் தற்கொலையே செய்து கொள்ளலாம் போல இருக்கும். இது போக ஜுனூன் தமிழ் என்று ஒன்றை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இது மகா கொடுமை!

இதெலாம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சில பத்திரிக்கைகளிலும் எழுத்து பிழைகள் இலக்கணப் பிழைகளோடு வெளிவருவது மிகவும் வேதனை. சினிமாவை எடுத்துக்கொண்டால் வித்தியாசமான குரலை கொடுக்கிறேன் என்ற பெயரில் தமிழே தெரியாதவர்களையும், தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க தெரியாதவர்களையும், கொஞ்சி கொஞ்சி தமிழை கொலை செய்பவர்களையும் வைத்து ரசிக்க முடியாத பாடல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.

ஆங்கிலத்திற்கு நாம் செய்யும் சேவையைப்போல் தமிழிற்கும் செய்தால் தமிழை நம்மிடமிருந்து நாமே காப்பாற்றலாம். இதேபோல் சில பதிவுகளிலும், இடுகைகளிலும், மறுமொழிகளிலும் பல பிழைகளை பார்க்க முடிகிறது. நாம் நம்மால் முடிந்தவரை தவறுகளை சுட்டிக் காண்பித்தால் மற்றவர்கள் தங்களை திருத்திக்கொள்ள உதவியாயிருக்கும்.

என்னடா இவன் நிறைய பேசுகிறானே ஆனால் இவன் இடுகையிலேயே பிழைகள் இருக்கிறதே என்று நினைகிறீர்களா? அப்படியானால் மறுமொழி எழுதும் போது அதையும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.